search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை நுண்ணறிவு"

    • இந்த மென்பொருள் கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
    • கட்டுரைகளை உருவாக்குவதில் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது.

    செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

    பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

    இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

    இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும்.

    ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.

    கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

    நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி "ஜெனிசிஸ்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது.

    உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும்.

    இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை. இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

    ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

    • கணினி சம்பந்தப்ப்டட வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால் அது மிகப் பெரிய தாக்கம்.
    • அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள்.

    மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் இந்தியாவிற்கு தந்து விடுகிறது. அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் லாபம் கிடைத்து வந்தது.

    தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

    இதனால் இந்தியாவின் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக "கோடர்கள்" அல்லது "புரோகிராமர்கள்" தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் எமட் கூறியிருக்கிறார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    பல்வேறு வகையான வேலைகளை வெவ்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதிக்கிறது. ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றும். ஆனால் அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாக்கம் குறைவாக இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் "லெவல் 3" வரையிலான கோடர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுவார்கள். அதே சமயம் பிரான்சில், ஒரு டெவலப்பரை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல."

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர். அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டம் இன்று நடக்கிறது.
    • இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார்.

    நியூயார்க்:

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

    • நியூயார்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி பழகி வருகிறார்.
    • செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டியது உள்ளது.

    சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் (ஏஐ-ஆர்டி பிசியல் இன்டலிஜென்ஸ்) வளர்ச்சி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    ஆரம்பத்தில் பொழுது போக்குக்காவும், கேளிக்கை நிகழ்ச்சிக்காவும் பயன் படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நாட்கள் செல்ல செல்ல மனித வளத்துறை, சாப்ட்வேர், எந்திரவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் புகுந்து விட்டது.

    மேலும் சில துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சாட்ஜிபிடி அறிமுகமானது. அமெரிக்காவில் கோர்ட்டுகளில் வழக்குகளில் வாதாடுவதற்கு கூட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வக்கீல்கள் அறிமுகமாகி விட்டன.

    இதே போல அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தை விர்ச்சுவலாக உருவாக்கி அதை வைத்து ஆன்லைனில் டேட்டிங் தளம் ஒன்றை தொடங்கினார். இந்த விர்ச்சுவல் உருவத்தை வாடிக்கையாளர்களிடம் பேசி பழக விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

    இதே போல நியூயார்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி பழகி வருகிறார். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை காணும் நேரம் வந்து விட்டது. ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'ஓடிவி' நாட்டிலேயே முதன் முறையாக மெய்நிகர் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செய்தி வாசிப்பாளரிடம் செய்திகளை எழுதி கொடுத்தால் அச்சு அசலாக அப்படியே வாசித்து விடுகிறார்.

    கடினமான வார்த்தைகளையும் கூட எந்த திணறலும் இல்லாமலும் லிசாவால் செய்திகளை படிக்க முடிகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த செய்தி வாசிப்பாளரால் தொகுத்து வழங்க முடியும். இந்தியாவில் புதிய மைல் கல்லாக அறிமுகமாகி உள்ள இந்த மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசா பல மொழிகளையும் பேசும் திறன் படைத்தது என்றாலும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் உருவானதன் பின்னணியே சுவாரசியமானது தான்.

    அதாவது இந்த லிசாவின் உருவம் அதே தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மற்றொரு பெண்ணை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அச்சு அசலாக அந்த பெண் போலவே, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட லிசாவும் தோன்றுகிறார்.

    செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியாத யாராவது லிசா செய்தி வாசிப்பதை பார்த்தால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. உண்மையிலேயே ஒரு பெண் தான் செய்தி வாசிப்பது போன்று தோன்றும். இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் மூலம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பணியை தொடர முடியும் என்பது போன்ற பல வசதிகள் உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலத்தில் மனிதவள துறையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலைக்கு வேட்டு வைக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

    ஆனால் அவ்வாறு எந்த ஆபத்தும் ஏற்படாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதும் சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    • பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
    • செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

    "விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

    செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

    "செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

    ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

    பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

    • எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
    • வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது.

    ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள் தொழில்நுட்ப செயலியின் உருவாக்கத்திற்காக, இணையத்திலிருந்து, "டேட்டா ஸ்கிரேப்பிங்" (Data Scraping) என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வழிமுறையை கையாண்டு, எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

    கோடிக்கணக்கான இணைய பயனர்களின் சமூக ஊடக கருத்துகள், வலைப்பதிவு இடுகைகள், விக்கிபீடியா வலைதளத்தின் கட்டுரைகள் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகள் போன்ற எண்ணற்ற தகவல்களை ஓபன்ஏஐ பயன்படுத்தும் போது அவர்களின் உரிமைகளை அது தன்னிச்சையாக மீறியிருக்கிறதா, இல்லையா என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை இந்த வழக்கு பரிசோதிக்க முயல்கிறது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வழக்கின் பின்னணியில் உள்ள சட்ட நிறுவனமான கிளார்க்சன், தரவு மீறல்கள் முதல் தவறான விளம்பரம் வரையிலான பிரச்சனைகளில் பெரிய குழுவின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதில் அனுபவமிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ரியான் கிளார்க்சன் கூறும்போது, "அதிக சக்தி வாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, தங்களின் தகவல்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் வணிக ரீதியாக தங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இவ்வழக்கில் பிரதிநிதித்துவம் கிடைத்திட எங்கள் நிறுவனம் விரும்புகிறது" என்றார்.

    மேலும், "வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு உண்மையான உரிமையாளர்கள், வலைதளங்களில் தங்கள் பதிவுகளை வெளியிடும் நபர்கள்தான். அவர்களில் எவரும் இத்தகைய ஒரு நிறுவனம் தங்கள் லாபத்திற்காக இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கவில்லை" என ரியான் கூறியிருக்கிறார்.

    குறுகிய காலங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நிறுவனத்திற்கெதிரான இந்த வழக்கின் போக்கை தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்று 65% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.

    சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைபயன்படுத்தி, பல துறைகளில் பல வேலைகளை துரிதமாகவும், திறம்படவும் செய்வது வழக்கமாகி வருவதுடன், செயற்கை நுண்ணறிவு வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

    கட்டுரைகளை எழுதுதல், மோசடியைக் கண்டறிதல், கற்பித்தல் மற்றும் மாசுபாட்டைக் கண்காணித்தல் ஆகியவை இதன் ஏராளமான பயன்பாடுகளில் அடங்கும்.

    இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, வேலைக்கான நேர்காணல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    வேலை தேடுபவர்களுக்கான பிரபல இணைய தளமான, "ரெஸ்யூம் பில்டர்" நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 43% நிறுவனங்கள், 2024ம் ஆண்டிற்குள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

    கணக்கெடுப்பின் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களிலும், 15% நிறுவனங்கள் தங்களின் அனைத்து பணியமர்த்தல் முடிவுகளுக்கும் "தொடக்கத்தில் இருந்து இறுதி வரை" (start-to-finish) இனி செயற்கை நுண்ணறிவின் பயன்படுத்தலை நாடப்போவதாக கூறியுள்ளன. 32% நிறுவனங்கள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளன.

    செயற்கை நுண்ணறிவு மூலமாக செய்யப்படும் நேர்காணல்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு கேட்டபோது, 65% பேர் பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்றும், 14% பேர் பணியமர்த்தல் திறனைக் குறைக்கும் என்றும், மற்றும் 21% பேர் இது செயல்பாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் நம்புகின்றனர்.

    ரெஸ்யூம் பில்டர் நடத்திய ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர். வேலைக்கு ஆட்களை நியமிக்கும் மேலாளர்கள் அல்லது ஆட்களை தேர்வு செய்யும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

    வேலை தேடுபவர்களில் 46% பேர் இப்போது தங்கள் பயோடேட்டா மற்றும் முகப்பு கடிதங்களை (covering letter) எழுதுவதற்கு தற்போது மிகவும் பிரபலமாகவுள்ள சாட்ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    மேலும், மிக அதிக சதவீதமாக (அதாவது 78% பேர்) வேலைக்கான விண்ணப்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உடனே பதிலை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து வருகிறார்.
    • வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்றார்.

    "செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஆதரித்து மாணவர்களிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறினார்.

    "அநேகமாக வீட்டுப்பாடமாக மாணவர்கள் செய்யும் கட்டுரைகள் எழுதுதல் போன்றவை இனி முன்பு இருந்தது போல் ஒரே மாதிரியாக இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    "எங்களிடம் கல்விக்காக ஒரு புதிய கருவி உள்ளது. வார்த்தைகளுக்கான கால்குலேட்டர் போன்றது" என்று கூறிய அவர், "நாம் மக்களுக்கு கற்பிக்கும் விதம் மாற வேண்டும். அதே போன்று நாம் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாற வேண்டும்" என தெரிவித்தார்.

    மனிதர்களை போன்ற உரையாடல்கள், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புகளை நொடிகளில் உருவாக்கும் திறனுடைய சாட்ஜிபிடி தொழில்நுட்பம், உலக மக்களின் கற்பனை ஆற்றலை மிகவும் கவர்ந்திழுத்திருக்கிறது. ஆனால், அதே சமயம் இது கல்வி உட்பட பல துறைகளில் பலருக்கு கவலைகளை எழுப்பியுள்ளது.

    குறிப்பாக கல்வித்துறையில் இதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பலர், அனேக மாணவர்கள் தாங்களாக சிந்தித்து அசலான ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பதில் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதையே விரும்ப தொடங்கி விடுவார்கள் என்றும் அதே போன்று, இந்த தொழில்நுட்பத்தை ஒரு சில மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி விடலாம் என்றும் கவலைப்படுகிறார்கள்.

    உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய தலைநகருக்கு ஆல்ட்மேன் வருகை தந்திருக்கிறார். அங்கு அவர் வணிக மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் விதிமுறைகளை வகுப்பது பற்றியும் விவாதித்து வருகிறார்.

    ஏ.ஐ.க்கான விதிமுறைகளை உருவாக்குமாறு அரசியல் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், "இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், முற்றிலும் தவறாகிவிடும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.

    "இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்மிடம் இருக்கப் போகும் கருவிகளுடன் ஒப்பிடும்போது நம்மிடையே தற்பொழுது உள்ள கருவிகள் மிகவும் பழமையானவை" என்று கூறிய அவர், இந்த தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

    ஏ.ஐ.க்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து தனது அச்சத்தை மீண்டும் வலியுறுத்திய ஆல்ட்மேன், உலகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, தாம் நேர்மறையாக உணர்ந்ததாக கூறினார். இருப்பினும் அவர் இச்சந்திப்புகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

    "எவ்வளவு தவறு நடந்தாலும், நாங்கள் மிகவும் பொறுப்பாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

    "சாட்ஜிபிடியினால் ஒரு சில வேலைகள் பறிபோய்விடும்" என்ற கருத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், மக்கள் எதிர்பார்ப்பது போல் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றார். புதிய வகை வேலைகள் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

    • ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
    • முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.

    "புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
    • இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.

    இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

    பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.

    கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...

     

    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

     

     

     

    ×